Saturday, February 28, 2009



அரைக் கம்பத்தில் தொப்புள் கொடி தொகுப்பு: அறிவுமதி



ஈழத்தில் அழித்தொழிக்கப்படும் நம் தமிழ் இனத்தின் இழப்பைத் தாங்க முடியாமல் குமுறும் இதயங்களின் துடிதுடிப்பு இந்தக் கவிதைகள். மனசைப் பிசைந்து, இதயத்தின் ஆழம் வரை வேரோடி, உயிர் உருவும் கவிதைகள். மனதை ஆற்றுப்படுத்த முடியாமல் படிக்கும்போது தவிக்கப்போவது நிச்சயம்.

பரிவும், கோபமும், ஆற்றாமையும் கொண்டு கவிஞர்கள் கண்ணிர்க் கவிதைகள் படைத்திருக்கிறார்கள். தவிர்க்க முடியாத புத்தகம். படிக்க நேர்ந்தால், தமிழ் இன உணர்வை ஆறுதலோடு பகிர்ந்து கொள்ளலாம்.

-ஆனந்தவிகடன்

விகடன் சொன்னது சரிதான். படித்து உணருங்கள்.

புத்தகம் : அரைக்கம்பத்தில் தொப்புள் கொடி / சாரல் வெளியிடு / 160ரூபாய்

Thursday, February 26, 2009



'சிட்டி'சன்

நாரை நடக்கும்
குளத்தில்
நண்டு பிடிச்சதில்லை

முங்கு நீச்சல்
போட்டியில்
மூச்சுத் திணறியதில்லை

கண் பறிச்சு
வெல்லமிட்டு
வெடி தேங்கா தின்னதில்லை

அடுக்குப் பானை
அரிசி திருடி
ஆற்றுச் சோறு ஆக்கியதில்லை

ஆனாலும் சொல்கிறாய்
ஐயாம் லிவிங் என்று
- தாயம்மா



ஏ.......மனிதா....
எதிர்க்காற்று வீசும்
மேட்டுச் சாலையில்
பழைய மிதி வண்டியில்
கைப்பிள்ளையோடு
தனது மனைவியை
மூச்சிரைக்க
மிதித்துச் செல்பவனிடம்
கேட்டறிய வேண்டும்
இல்லறத்தின் பொருளை.



அமைதி
கோவிலுக்குப் போ என்றார்கள்
சர்ச்சுக்குப் போ என்றார்கள்
மசூதிக்குப் போ என்றார்கள்
பாருக்குப் போய் பீர் அடி என்றார்கள்
பீச்சுக்குப் போ என்றார்கள்
' என்ன சார் ஆச்சு ? '
பரிவோடு கேட்டான் இஸ்த்ரி முருகன் !
மனக்கவலை சொன்னேன்-
மருந்து போல் ஒரு வார்த்தை சொன்னான்
"வீட்டுக்கு போ வாத்தியாரே"
-கண்ணன்




பட்டாம்பூச்சி விற்பவன்

பதிவுகள்
மலை உச்சிப் பாறையில்,
கல்லூரி மரக்கிளையில்,
தியேட்டர் சேரில்,
புழுதி படிந்த
கார் கண்ணாடியில்,
போன்ற பலவற்றில்
சந்தோஷமாய்
எழுதிய என் பெயர்
குறுகிப் போனது
கடன் பத்திரத்தில்.
-நா. முத்துக்குமார்
மார்கழிமாத கோலத்தின்
புள்ளிகளாகிப் போயின
தவறிவிழுந்த தோட்டாக்கள்
-ரா. நாகப்பன்

முள் குத்தியது
வலிக்கவில்லை
கட்டைக்கால்
-கவிமதி



ரத்தம் வடிந்த இடத்தில்
மொய்க்கும்
ஈக்களுக்குக் கூட
திகட்டி இருக்கும்
அராஜகமே
உனக்கேன்
அடங்கவில்லை ரத்தவெறி
-தேனுசா ஈசுவரன்