Thursday, February 10, 2011

நிலா கவிதைகள்.....


நிலா பார்த்தல்

ரயில் வண்டியின்
குலுங்குகிற

ராத்திரி விழிப்பில்
கண்ணாடி ஜன்னல் வழி
கலங்கி தெரிந்தது
நீரற்று ஆற்று மணல் மேல்

நிலா .

மரணத்திலிருந்து
தப்பித்த கண்கள்
மருத்துவமனைக்
கட்டிலில் உறங்க,
கணக்கும் மனதுடன்
நிசியில் வெளிவந்து
நின்ற பொழுது
வேப்பமரக்
கிளைகளுக்கிடையில்
நிலா அசைந்தது.

நண்பனின் அறையிலிருந்து
திரும்பும் போது
ஏற்பட்ட
திடீர் வெறுமையில்,
நிச்சயமற்ற
தெருக்களில்
நீண்ட நேரம் நடந்து
வீட்டைத்
தொடுகையில்
பூட்டிய கதவை
நிலவும் தட்டியது.

மின்வெட்டில் விசிறி
சுழற்சியை நிறுத்த
காற்றைத் தேடி
இருட்டுக்குள் துளாவி
கைப்பிடிச் சுவரில்
முகம் பதித்த போது
நிலா வீசியது
சில நட்சத்திரங்களை

தானாக
இப்படி தட்டுப்பட்டது
தவிர நிலா பார்க்க என்று
போய் நிலா பார்த்து நாளாயிற்று.
- கல்யாண்ஜி




நிலா சேனல்


தூக்கம் தொலைத்த இரவில்
எலெக்ட்ரான்கள் ஒளிரும் திரையில்
குறையாடைக் குமரிகளின்
பூனைநடை அலுத்து
கிழநாயகனால் கழுத்து முகரப்பட்ட
இளநாயகியின் பொய்கிறங்கலில் சலித்து
ஆண்குரலில் சிரித்த
வெள்ளைக்காரியை வெறுத்து
ஓடுடைத்து வெளியில் வரும்
பறவைக்குஞ்சையும் பார்க்கப்பிடிகாமல்
ஒற்றைப் பொத்தான் அழுத்தலில்
உலகத்து க் கதவுகளை எல்லாம் மூடிவிட்டு
இருள் சூழந்த அறையின்
ஜன்னலுக்கு அப்பால் விழித்திருந்த
நிலவோடு சிநேகிதமானேன்.

- எஸ்.பாபு