Friday, January 20, 2012

கல்யாண்ஜி கவிதைகள்............சைக்களில் வந்த
தக்காளி கூடை சரிந்து
முக்கால் சிவப்பில் உருண்டது
அனைத்து திசைகளிலும் பழங்கள்
தலைக்கு மேலே
வேலை இருப்பதாய்
கடந்தும் நடந்தும்
அனைவரும் போயினர்
பழங்களை விடவும்
நசுங்கி போனது
அடுத்த மனிதர்கள்
மீதான அக்கறை
-கல்யாண்ஜிதினசரி வழக்கமாகிவிட்டது
தபால்பெட்டியைத்திறந்துபார்த்துவிட்டு
வீட்டுக்குள் நுழைவது.
இரண்டு நாட்களாகவேஎந்தக் கடிதமும் இல்லாதஏமாற்றம்.
இன்று எப்படியோஎன்று பார்க்கையில்
அசைவற்று இருந்தது
ஒரு சின்னஞ்சிறுஇறகு மட்டும்
எந்தப் பறவைஎழுதியிருக்கும்
இந்தக் கடிதத்தை.
-கல்யாண்ஜி


நீ வருவதற்காக
காத்திருந்த நேரத்தில்தான்
பளிங்கு போல்
அசையாதிருந்த தெப்பக்குளம்
பார்க்க ஆரம்பித்தேன்.
தலைகீழாய் வரைந்து கொண்ட
பிம்பங்களுடன்
தண்ணீர் என் பார்வையை
வாங்கிக் கொண்டது முற்றிலும்;
உன்னை எதிர்பார்ப்பதையே
மறந்து விட்ட ஒரு கணத்தில்
உன்னுடைய கைக்கல் பட்டு
உடைந்தது
கண்ணாடிக்குளம்.
நீ வந்திருக்க வேண்டாம்
இப்போது
-கல்யாண்ஜி


குற்றவுணர்வுகள் ஏதுமில்லை
சந்தோஷமாகவே இருக்கிறது
ஆனாலும் அவள் என்கனவில் வந்ததை
இவளிடம் சொல்லமுடியவில்லை
இவளுக்கும் இருக்கலாம்
குற்றவுணர்வுகள் அற்ற
சந்தோஷம் தந்த
என்னிடம் சொல்ல முடியாத
இவள் அவனிடம் பேசுகின்ற கனவுகள்.
அவளைப்பற்றி இவளிடம் சொல்லாமல்
அவனைப்பற்றி என்னிடம் சொல்லாமல்
இவளும் நானும்
இருக்கின்றோம்
சந்தோஷமின்றி, குற்றவுணர்வுகளுடன்.
-கல்யாண்ஜிதானாய் முளைத்த
செடி என்கிறார்கள்
யாரோ வீசிய
விதையிலிருந்து தானே
- கல்யாண்ஜி

Thursday, February 10, 2011

நிலா கவிதைகள்.....


நிலா பார்த்தல்

ரயில் வண்டியின்
குலுங்குகிற

ராத்திரி விழிப்பில்
கண்ணாடி ஜன்னல் வழி
கலங்கி தெரிந்தது
நீரற்று ஆற்று மணல் மேல்

நிலா .

மரணத்திலிருந்து
தப்பித்த கண்கள்
மருத்துவமனைக்
கட்டிலில் உறங்க,
கணக்கும் மனதுடன்
நிசியில் வெளிவந்து
நின்ற பொழுது
வேப்பமரக்
கிளைகளுக்கிடையில்
நிலா அசைந்தது.

நண்பனின் அறையிலிருந்து
திரும்பும் போது
ஏற்பட்ட
திடீர் வெறுமையில்,
நிச்சயமற்ற
தெருக்களில்
நீண்ட நேரம் நடந்து
வீட்டைத்
தொடுகையில்
பூட்டிய கதவை
நிலவும் தட்டியது.

மின்வெட்டில் விசிறி
சுழற்சியை நிறுத்த
காற்றைத் தேடி
இருட்டுக்குள் துளாவி
கைப்பிடிச் சுவரில்
முகம் பதித்த போது
நிலா வீசியது
சில நட்சத்திரங்களை

தானாக
இப்படி தட்டுப்பட்டது
தவிர நிலா பார்க்க என்று
போய் நிலா பார்த்து நாளாயிற்று.
- கல்யாண்ஜி
நிலா சேனல்


தூக்கம் தொலைத்த இரவில்
எலெக்ட்ரான்கள் ஒளிரும் திரையில்
குறையாடைக் குமரிகளின்
பூனைநடை அலுத்து
கிழநாயகனால் கழுத்து முகரப்பட்ட
இளநாயகியின் பொய்கிறங்கலில் சலித்து
ஆண்குரலில் சிரித்த
வெள்ளைக்காரியை வெறுத்து
ஓடுடைத்து வெளியில் வரும்
பறவைக்குஞ்சையும் பார்க்கப்பிடிகாமல்
ஒற்றைப் பொத்தான் அழுத்தலில்
உலகத்து க் கதவுகளை எல்லாம் மூடிவிட்டு
இருள் சூழந்த அறையின்
ஜன்னலுக்கு அப்பால் விழித்திருந்த
நிலவோடு சிநேகிதமானேன்.

- எஸ்.பாபு

Saturday, February 6, 2010

காதல் கவிதைகள்2

அணு அணுவாய்ச் சாவதென
முடிவெடுத்தப் பிறகு
காதல் சரியான வழிதான்
- அறிவுமதி

தண்டவாளத்தில்
தலைசாய்த்துப் படுத்திருக்கும்
ஒற்றைப்பூ........என் காதல்.
நீ நடந்து வருகிறாயா?
ரயிலில் வருகிறாயா?

- பழனிபாரதி

அன்பு என்னும் தலைப்பில்
மிகச்சிறிய கவிதை கேட்டார்கள்
அம்மா என்று சொன்னேன்
கேட்டது அம்மாவாக இருந்தால்
இன்னமும் சிறியதாக சொல்லியிருப்பேன்
நீ என்று.
-தாஜ்


சாதல் சாதாரணம்
காதல் சதா ரணம்
- ரா. பார்த்திபன்
எல்லாக் கவிதைகளுமே
உன்னைப் பற்றியவை தானெனினும்
ஒரு கவிதை கூட
உன்னை மாதிரி இல்லையே?
- தபூ சங்கர்


இந்த நிமிடம்
நீ என்ன செய்து கொண்டிருப்பாய்
என்று சிந்திப்பதிலேயே
போய் விடுகின்றன
என் எல்லா நிமிடங்களும்.

- லெனின் பிரசன்னா

எல்லோரும்
காதலிக்கிறார்கள்
பின்னொரு நாளில்
வருத்தபடுகிறார்கள்.
சிலர் சேர்ந்ததற்காக
சிலர் பிரிந்ததற்காக.......

-பாரதி ஜிப்ரான்

Thursday, June 11, 2009

யாழன் ஆதி

வண்ணம்

மேய்ந்து திரும்பும்
மாடுகளில் தெரியும் ஒருவகை
பச்சைநிற வாசனை

பறவையின் சிறகில்
பிரதிபலிக்கும் நீலம்
வானத்திற்கானது

பூக்களிலிருந்து பட்டாம்ப்பூச்சிகளுக்கோ
அல்லது பட்டாம் பூச்சிகளிலிருந்து
பூக்களுக்கோ மாறியிருக்கலாம்
வண்ணங்கள்

நீருக்குள் தெரியாத வண்ணம்
மீனுக்குப் புலப்பட்டிருக்கலாம்
நீரில்
உறிஞ்சிய
வண்ணங்களில் மீன்கள்.

-யாழன் ஆதி

Saturday, February 28, 2009அரைக் கம்பத்தில் தொப்புள் கொடி தொகுப்பு: அறிவுமதிஈழத்தில் அழித்தொழிக்கப்படும் நம் தமிழ் இனத்தின் இழப்பைத் தாங்க முடியாமல் குமுறும் இதயங்களின் துடிதுடிப்பு இந்தக் கவிதைகள். மனசைப் பிசைந்து, இதயத்தின் ஆழம் வரை வேரோடி, உயிர் உருவும் கவிதைகள். மனதை ஆற்றுப்படுத்த முடியாமல் படிக்கும்போது தவிக்கப்போவது நிச்சயம்.

பரிவும், கோபமும், ஆற்றாமையும் கொண்டு கவிஞர்கள் கண்ணிர்க் கவிதைகள் படைத்திருக்கிறார்கள். தவிர்க்க முடியாத புத்தகம். படிக்க நேர்ந்தால், தமிழ் இன உணர்வை ஆறுதலோடு பகிர்ந்து கொள்ளலாம்.

-ஆனந்தவிகடன்

விகடன் சொன்னது சரிதான். படித்து உணருங்கள்.

புத்தகம் : அரைக்கம்பத்தில் தொப்புள் கொடி / சாரல் வெளியிடு / 160ரூபாய்