Friday, February 6, 2009

நெருப்புக் கவிதைகள்


தேர் வரா வீதி
தேர் வரா வீதியெங்கள் வீதி
தேர்போலும்
வந்ததே கிடையாது பேருந்து

ஒரே ஒரு முறை பிளசர் வந்தது
செத்துப்போன லதாவை இறக்கிவிட

அதுமுதல் பிளசரின் வண்ணம்
கருப்பென்று சொல்கின்றன
குதியாட்டம் போட்ட குழந்தைகள்

டிராக்டரோ லாரியோ
ஆட்களை ஏற்றிப்போக வருவதுண்டு
மாநட்டுப் பந்தலுக்கு

மெய்யாலுமே தெரியாது
ஏரோப்பிளேனுக்கும்
எலிகாப்படருக்குமுள்ள வித்தியாசம்

எதுவும் வரத் தயங்குகிற எங்களூருக்கு
ஏன் எப்போதும் வந்து தொலைக்கிறது
பஞ்சமும் சாதிப் பிணக்கும்
- யுகபாரதி



வலியிழந்தவள்
அடி, மிதி, உதை
அஞ்சமாட்டேன்.
வெகு நேரமாகிவிடாது
போதையில் நீயிருக்கையில்
ரசத்தில் துளி விஷம்
சேர்த்துவிடவோ,
ரயிலேறி நீ தொட முடியா தூரம்
போய்விடவோ.

ஆனால்,
நீயெனக்குச் செய்யும்
சித்ரவதைகள்
உதவியாயிருக்கும் ;
எனக்கும் என் பிள்ளைக்கும்
திரும்ப நீ தேவையென்ற உணர்வு
தோன்றவிடாமலிருக்க.

- பாரதிப்ரியா






இடமற்று நிற்கும்
கர்ப்பிணியின்
பார்வை தவிர்க்க
பேருந்துக்கு
வெளியே பார்ப்பதாய்
பாசாங்கு செய்யும் நீ
என்னிடம் எதை
எதிர்பார்க்கிறாய்
காதலையா?
-சுகிர்தராணி






கண்ணீருடன்..............

உனது தந்தையின் இறப்புச் செய்தி
ஈ- மெயிலில் வருகிறது.
சாப்ட்வேர் சிலந்திவலைப் பின்னலுக்குள்
தகப்பன் நினைவுகளைத் தேடிஎடுத்து
கொடுக்கப்பட்ட சிறு இடைவெளியில்
கொஞ்சமாய் அழுகிறாய்.
உயிர் மீட்க உதவாத உனது டாலர்களோடு
நீ வந்து சேரும்போது
எரிந்த சாம்பல்கூட எஞ்சியிருக்காது.
அதனாலென்ன நண்பனே .............
இறந்துபோனவர்களுடன் தொடர்புகொள்ள
வெப்சைட் வராமலா போய்விடும் ?

-எஸ்.பாபு



No comments:

Post a Comment